Monday, February 16, 2009

சொல்லவும் வேண்டுமோ?

கண் நடிக்கும் என்றே நாம் பார்த்து நிற்போம்
கை நடிப்பைப் பார்ப்பதற்கு விட்டுப் போகும்
பண்ணிசைக்கு வாயசைக்க பார்த்திருந்தால்
பாடியது அவரேதான் என்று தோன்றும்
விண்ணவரின் வேடத்தில் அவரும் வந்தால்
விண்ணவர்க்கோ வியப்பினால் இமை துடிக்கும்
கண்ணவரே எங்களது திரைத் துறையின்
கடவுளே சிவாஜி கணேசனன்றோ

நடிப்பிற்காய் அவன் ஒருவன் தன்னை மட்டும்
நற்றமிழ்த்தாய் ஈன்றெடுத்தாள் இன்று வரை
படிக்கின்றார் அவ்னைத்தான் அவனின் வழி
படிப்பாரே கொஞ்சம் கொஞ்சம் நடிக்கின்றார் காண்
துடிக்கின்ற கன்னங்கள் விழியிரண்டு
துள்ளி வரும் நடையழகும் மென்னடையும்
வடித்திட்ட வளர் தமிழான் சிவாஜி என்னும்
வள்ளல் அவன் வழங்கியதில் வாழ்கின்றாரே

ஒவ்வொரு அசைவும் நமது உயிரினைக் கொள்ளை கொள்ளும்
அவ்விரு விழிகள் பேசும் ஆயிரம் மொழிகள் தன்னை
செவ்விய தமிழோ அவனால் சிறப்புகள் கோடி கொள்ளும்
சிறு நடை நடந்தால் கூட சிங்கமே ஒதுங்கிக் கொள்ளும்
எவ்விதம் இவனால் மட்டும் இத்தனை முடியும் என்று
அவ்விய நெஞ்சத்தாரின் அழுக்காறு அவரைக் கொல்லும்
பவ்வியம் காட்டும் போதும் பல விதம் காட்டி நிற்கும்
பல்கலைக் கழகம் எங்கள் பார் புகழ் சிவாஜி அண்ணன்

மறைந்து விட்டான் மா கலைஞன் என்று இந்த
மனிதர்களும் புலம்புகின்றார் புரியாராகி
நிறைந்து விட்டான் நற்றமிழர் நெஞ்சிலெல்லாம்
நீங்காத புகழ் கொண்ட மேலவனாய்
சிறந்து நிற்பான் என்றென்றும் தமிழர் நெஞ்சில்
சிவனாகிச் சிவாஜியாய் எங்கள் அண்ணன
கலந்து விட்டான் அறிஞர்களின நெஞ்சில் எல்லாம்
கலையுலகத் தலைமகனாய் வாழுகின்றான்

நன்றி -

No comments:

Post a Comment